ஜோஜோ முயல்குட்டி

 ஒரு குழந்தையைத் தொடும் மாத்திரத்தில், நமக்குள் ஏற்படும் ஒரு ஈரமான மென்மை எங்கிருந்து தோன்றுகிறது? நம் உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதா?  இல்லை, அந்த குழந்தையின் ஊடாக நமக்கு கிடைக்கும் பரிசா? ஒரு கரடு முரடான வன்முறையாளரின் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்தாலும், அதே மென்மையை அவரால் உணர முடியும் தானே?

ஜோஜோ. ஒரு நாஜி ஆதரவாளர், யூதர்களை அடியோடு வெறுப்பவர், ஹிட்லருக்காக தன் உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருப்பவர். முக்கியமான விஷயம். ஜோஜோவுக்கு 10 ½ வயது.  தினமும் கற்பனையில் ஹிட்லருடன் உரையாடும் அளவுக்கு, இந்த வயதிலேயே இவனுக்குள் ஒரு இனவெறியா என்று யோசித்தால், அவனைப் போல ஆயிரகணக்கான குழந்தைகள், போருக்கு தயாராக இருக்கின்றனர் ஜெர்மனியில். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இது தான் ஜெர்மனியின் நிலை.

ஆனால் இவையெல்லாம் ஒரு நொடியில் மாறிவிடுகிறது.  அவனை மாற்றியமைப்பது ஒரு முயல்குட்டி தான். அந்த முயலைக் கொன்றால் தான் நாஜி வீரனாக கருதப்படுவான் என்ற நிலையில் அவனால் அதை செய்ய முடியவில்லை. ஒரு முயலை கொல்ல முடியாதவனுக்கு, இராணுவத்தில் இடம் இல்லை என்று ஆகிவிடுகிறது.

இருந்தாலும் அவனுக்கு சிறுவயதில் இருந்து புகட்டப்பட்ட யூத வெறுப்பை அவனால் அத்தனை எளிதாக கைவிட முடியவில்லை. அதற்கு எல்சா என்ற ஒரு பெரிய  யூத பெண் முயல் தேவைப்படுகிறது. அவளுடனான நட்பு அவனுடைய எல்லா நம்பிக்கைகளையும் மாற்றியமைக்கிறது. யூதர்கள் மீது கொண்ட வெறுப்பும், ஹிட்லர் மீது கொண்ட பற்றும் உடையும் தருவாயில் தான் ஜெர்மனியும் போரின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

பெரியவர்களின் உலகத்தை விட, குழந்தைகளின் உலகம் எப்போதும் வித்தியாசமானது தான். ஒரு குழந்தையின் கண்களின் வழியாக போரை, அழிவை, வன்முறையை பார்க்கும் போது தான் தெரிகிறது, நாம் போரை விதைத்து, ஒரு அமைதியான எதிர்காலத்தை பெற முடியும் என்று நினைப்பது எத்தனை அபத்தமானது என்று!

போரையும் குழந்தைகளையும் மையப்படுத்தி வந்த வேறு சிலப் படங்கள் ஞாபகத்திற்கு வந்தது. Life is Beautiful,  கண்ணத்தில் முத்தமிட்டால்  போன்ற படங்கள் இதே போன்ற சிந்தனையை தான் வலியுறுத்துகின்றன. போர்களை நிறுத்தும் வல்லமை குழந்தைகளிடம் இருக்கிறது. வியட்நாம், சிரியா என நம் நினைவிலிருந்து அகலாத புகைப்படங்கள் எல்லாமே குழந்தைகளுடையவை தான்.

Image result for vietnam war children
Image result for alan kurdi

ஹிட்லரின் ஜெர்மனியை எத்தனையோ திரைப்படங்களில்,  தொடர்களில், புத்தகங்களில் பார்த்திருந்தாலும், ஜோஜோ ராபிட்டு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.

 இந்தப் படம் போரின் வேறொரு முகத்தை நமக்கு காட்டுகிறது. அதன் மெல்லிய உணர்வுகளை. மெண்மையான மனிதர்களை. உண்மையிலேயே போரில் ஒரே அணியில் இருக்கும் எல்லாருக்கும் ஒரே அளவிலான வன்மம் இருக்கிறதா? இல்லை ஒரு நிர்பந்தத்தின் பெயரில் தன் கைகளில் ரத்தக் கரையை அவர்கள் வாங்கிக் கொள்கிறார்களா? வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எல்லாரும் கொலைகாரர்கள் தான். ஜோஜோவும், கேப்டன் கேவும், ரோசியும் கூட நாஜிகள் தான். கொலைக்காரர்கள் தான். ஆனால் அவர்களுக்குள்ளும் மனிதம் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவதற்கான சூழ்நிலைகள் தான் அமைய வேண்டும். அவை வாய்க்கப் பெறாமலேயே இறந்து போவபர்கள் எத்தனையோ பேர் உண்டு!

ஜோஜோ ராபிட்டு திரைப்படத்தின் காட்சிகளையும், வெள்ளைப்பூக்கள் பாடலையும் வைத்து உருவாக்கப்பட்ட வீடியோ தான் இது. உலகின் எல்லா மொழிகளிலும்  ஒரு உணர்வை கடத்த முடியும் என்றால், அது நிச்சயம் அன்பு தான். நன்றி சரத் பிரசன்னா !

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started