அறிவியாதி

அறிவு தரும் கர்வம் தான் உலகத்தின் மிக ஆபத்தான வியாதி. அறிவை எப்போதும் அனுபவம் தோற்கடிக்கும் என்ற உண்மையை உணர்ந்தவனே உண்மையான அறிவாளியாக இருக்க முடியும் . நிறைய புத்தகங்களை படிக்கிறோம், அது குறித்து எழும் விமர்சனங்களை படிக்கிறோம், விமர்சனங்களின் விமர்சனங்களையும் படிக்கிறோம். ஆனால் ஒரு விஷயத்தை எல்லா கோணங்களில் இருந்தும் யார் ஒருவராலும் படித்து தெரிந்துக் கொள்ள முடியாது. களத்திலேயே இருப்பவர்களுக்கு கூட எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ள சில மாதங்கள் ஆகலாம்.

எனவே நமது கருத்துக்களுக்கு எதிர்கருத்து வரும் போது, நமது அரைகுறை அறிவைக் கொண்டு மட்டையடி அடித்து விடக்கூடாது. பேச வந்தவரும் பேசாமல் போய்விடுவார், நமக்கும் கடைசி வரை அப்படி ஒரு பார்வை இருப்பதே தெரியாமல் போய்விடும். இதை செய்யும் பல அறிவாளிகளை பார்த்திருக்கிறேன். நானும் செய்திருக்கிறேன். சராசரியாக எல்லாரும் படிக்க நாளிதழை விட கூடுதல் இரண்டு நாளிதழ், புத்தகம் படித்தால் உங்களுக்கு இந்த வியாதி தொற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

சாதி, மதம் போன்ற சிக்கலான விஷயங்களை பேசும் போது கூட மொத்தமாக எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிடக் கூடாது. நீங்கள் நிச்சயம் அவர்களது பார்வைக்கு ஆதரவாக பேச மாட்டீரகள் என தெரிந்தால், உங்களிடம் எப்படி அவர் உரையாடலுக்கு வருவார்? இதை பெரிதாக புத்தக அறிவு இல்லாதவர்கள ரொம்ப சுலபமாக செய்வார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு தன்னை எல்லா இடத்திலேயும் அறிவாளியாக நிறுவிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

சமூகவலைதளங்களில் முற்போக்கு சிந்தனை உள்ளவர்களையே பார்த்து, பேசும் போது, ஏதோ உலகமே முற்போக்கான சிந்தனைகளை தழுவிக்கொண்ட மாயை ஏற்படும். கொஞ்சம் சமூக வலைதளத்தை தாண்டி, சமூகத்தை பார்த்தால் தான் தெரியும் வீட்டிலேயே எத்தனை தேவையற்ற ஆணிகள் இருக்கின்றன என.

புத்தக அறிவு முக்கியம் தான். ஆனால் அது உங்களை சமூகத்தோடு உரையாட லாயிக்கில்லாத மனிதனாக மாற்றிவிடக்கூடாது. படிப்போம், அறிவோம், உரையாடுவோம்! உரையாடலின் வழி உலகை மாற்றுவோம்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started